ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தம்; மறுமலர்ச்சி திமுக ஆதரவு வைகோ அறிக்கை

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தம்; மறுமலர்ச்சி திமுக ஆதரவு வைகோ அறிக்கை

ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12-ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது.

9 பிப்ரவரி, 2026
2 நிமிடம் படிக்க
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தம்; மறுமலர்ச்சி திமுக ஆதரவு வைகோ அறிக்கை

ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12-ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது.

நூற்றாண்டு காலம் போராடி, இந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பும் -பின்பும், உருவாக்கப்பட்ட 44 தொழிலாளர் சட்டங்களில் 29 சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக்கியதன் மூலம், 80 சதவிகித தொழிலாளர்கள் சட்ட வரம்புக்கு வெளியே தள்ளுவதோடு, இந்தியா மற்றும் பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு சாதகமாகவும், எளிதாக வணிகம் செய்வதை நோக்கமாகக் கொண்ட, சட்டத் தொகுப்புகளை ஒன்றிய அரசு  திரும்பப்பெற வேண்டும்.

விவசாயிகளைப் பாதிக்கும், விதை சட்ட முன் வடிவை கைவிட வேண்டும். விளைப்பொருட்களுக்கு உரிய ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மின்சார உற்பத்தி - விநியோகம் தனியார் மயமாக்கும் நோக்கோடும், விவசாயிகள், விசைத்தறியாளர்கள், ஒரு விளக்கு பயன்பாட்டாளர் என அனைத்துத் தரப்பினரையும், பாதிக்கும் மின்சார சட்டத் திருத்த சட்ட முன்வடிவை திரும்பப் பெற வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்திலிருந்து, தேச தந்தை மகாத்மா காந்தி பெயரை நீக்கியதோடு, மத்திய அரசு, தனதுப் பங்களிப்பைக் குறைத்து, மாநில அரசுகளுக்கு நிதிச்சுமையை கூடுதலாக்குவதைக் கண்டிப்பதுடன், மீண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி சட்டத்தை, முன்பிருந்த நிலையில் செயல்படுத்த வேண்டும்.

காப்பீட்டுத் துறையில், 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை, கைவிட வேண்டும்.

அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின் உற்பத்தி மசோதா  - 2025 ஐ திரும்பப்பெற வேண்டும்.

மின்சார வினியோகத்தை முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதா 2025 ஐ மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். 

ஒன்றிய பாஜக அரசு, கடந்த 2025, நவம்பர்  21-ஆம் தேதி  அறிவித்த தொழிலாளர் நல சட்ட திருத்தம் (Labour Code) அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொழிலாளி வர்க்கத்தின் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க மட்டும் அறிவிக்கப்படவில்லை,   அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அமைப்பு (சங்கம்) சேரும் உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, வேலைநிறுத்த உரிமை, சமத்துவம், மாநிலங்களின்  உரிமை ஆகிய அனைத்தையும் பாதுகாப்பதை  உள்ளடக்கியதாக இருக்கிறது.

இது மட்டுமின்றி, ஊரக விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு சிறிதளவு வாழ்வாதார நம்பிக்கையூட்டிய நூறு நாள் வேலைத்திட்டம் (MGNREGA) பெயர் மாற்றத்துடன் சொற்ப வருவாயை பறிக்கும் உள்ளடக்க கூறுகளோடு புதிய திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதிலும் மாநில அரசின் உரிமை, அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த எதேச்சதிகாரத்தை முறியடிக்கவும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் பிப்ரவரி 12 வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது , ஜனநாயக சக்திகள், முற்போக்கு அமைப்புகள், ஒன்றிய அரசின் பாசிசத்தை எதிர்க்கக்கூடிய கட்சிகள் அனைத்திற்கும்  கடமையாக இருக்கிறது.

பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்குவதுடன், நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் நலனை முன் நிறுத்தி நடைபெறும் இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழக மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை - 8

09.02.2026

 

 


 

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்